கொடியேற்ற மகத்துவம்

கொடியேற்ற தத்துவமும் வரலாறும்

மனம், வாக்கு காயங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் உருவத் திருமேனி கொண்டு எழுந்தருளி இருக்கும் இடங்களே ஆலயங்களாகும். பாலிலே நெய் போல் வெளிப்படாது நிற்கின்ற இறைவன் ஆலயங்களிலே தயிரிலே நெய் போல விளங்கி நிற்கின்றான். மனித உடம்பு போல ஆலய அமைப்பும் விளங்குகிறது. தெய்வத்தின் சாந்நித்தியத்துக்கு உரிய புனித இடம் ஆலயத்தில் கொடிக் கம்பத்திலிருந்து கர்ப்பக் கிருகம் வரை வியாபித்திருக்கிறது.
 
கொடி மரம் மூலாதாரமாகவும் பலிபீடம் சுவாதிட்டானமாகவும் பக்கத்திலே அமைந்துள்ள வாகனம் மணி பூரகமாகவும் அமைந்துள்ளது. இறைவனின் அருளை உயர்த்திக் காட்டிக்கொண்டிருப்பது போல் கொடிமரம் விளங்குகிறது. கொடி மரத்தை, துவஜஸ் தம்பம் என்று சொல்வர். இது கோவில் கோபுரத்தின் முக்காற் பங்கு உயரத்துக்கு அமைய வேண்டும் நிலத்துக்குள் ஐந்தில் ஒரு பாகம் ஸ்தாபனம் செய்யப் படவேண்டும். அடிப்பாகம் சதுரமாக அமைய வேண்டும். இது ஸ்தம்ப பீடம் என்று சொல்லப்படும். மனித உடலுக்கு முதுகெலும்பைப் போலக் கொடிமரத்துக்கு அதன் தண்டுப் பகுதி இன்றியமையாதது. உடலில் சுழு முனை நாடி செல்லும் வழியாகிய வீணைத் தண்டை கொடிமரம் குறிக்கிறது. 33 வளையங்கள் கொண்டது முதுகெலும்பு விணைத்தண்டு மூலாதாரத்திலிருந்து பிரம்மாந்திரம் வரை இருப்பதுபோல கொடிமரமும் மூலலிங்கத்தின் மட்டத்தில்ருந்து ஸ்தூபியின் அளவு வரை இருக்கும். 

குண்டலினி சக்தி சுழுமுனை நாடி வழியாக எழுவது போல் கொடி மரத்தில் இடபக் கொடி ஏற்றப்படுதிறது இத்துடன் விழா ஆரம்பிக்கப் படுகிறது. கொடிக் கம்பம் ஸ்தாபித்தல் கி.மு 2ம் நூற்றாண்டிலேயே நடைமுறையில் இருந்தது என்பதற்குச் சான்றுகள் உண்டு. அக்கால நாணயம் ஒன்றில் கொடிமரமும் ஆலயமும் பொறிக்கப்பட்டுள்ளது. வேத புராணங்களில் கொடிமரம் பற்றிய குறிப்பு இருப்பதால் இது பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்தது என்பது தெரிகிறது. கொடிமரத்துக்கு வீணா தண்டம், மேரு தண்டம் என்னும் பெயர்களும் உண்டு. 33 கணுக்களுடன் செய்யப்படும் கொடிமரம் உத்தமமானதாகும். 

கொடியேற்றுவதற்கு முன் யாகசாலை அமைத்து யோக மாயை முதலிய சக்திகளை ஒன்பது கும்பங்களில் வைத்து ஆவாகனம் செய்வர் இதற்குப் பின் திக்குப் பாலகரைப் பூசித்து வணங்கி பாலிகைகளில் முளைகளை நிறைத்து அட்ட பந்தனம் செய்வர். இன்னும் பல கிரியைகள் ஆற்றிய பின்பே கொடியேற்றப்படும். சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுபடவேண்டும் என்ற தத்துவத்தை கொடியேற்றம் காட்டுகிறது. முழுமுதற் பொருளாகிய எம்பெருமான் அம்பிகையாய், விநாயகராய், முருகனாய் இன்னும் பல வடிவுகளை உடையவராய் ஆலயங்களில் கோயில் கொண்டருளுகிறார்.

 அவருடைய வடிவங்களை கும்பத்திலும் பிம்பத்திலும் தம்பத்திலும் தாபித்து வழிபட்டு வருவது சைவ ஆகம மரபு. அபிஷேக நாட்களிலே கும்பத்திலே இறைவனை இருத்துகிறோம். மகா உற்சவ நாட்களிலே கொடியேற்றும் தொடக்கம் தீர்த்தம் வரை தம்பத்திலே இறைவனை இருத்துகிறோம். கோயிலிலே பலிபீடத்தைச் சார்ந்து கொடிமரம் இருக்கிறது. கொடிமரத்திலே ஒருஆடை சுற்றப்பட்டிருப்பதையும் அந்த ஆடையுடன் ஒரு தருப்பைக் கயிறு இணைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். கொடிமரம் சிவத்தையும் ஆடை ஆன்மாவையும் தருப்பைக் கயிறு ஆன்மாவைப்பந்தித்து நிற்கும் பாசத்தையும் குறித்து நிற்கின்றன. உயிர்கள் எல்லாம் சிவமாகிய கடவுளையே ஆதாரமாகக் கொண்டு விளங்குகின்றன .அதனையே கொடிமரத்தைச் சுற்றியுள்ள சீலை காட்டுகிறது. ஆனால் கயிறு சீலைலையே பற்றி நிற்கிறது. கயிறுபோல் இருப்பது ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மலங்கள். மலங்களினால் பீடிக்கப்பட் உயிர்கள் முடிவில் சிவத்தோடு ஒன்றி பாசத்திலிருந்து நீங்கி இருப்பதையே கொடிமரத்தோடு சேர்ந்து நிற்கும் சீலை காட்டுகிறது. பதி, பசு, பாசம் என்ற முப்பொருளையும் இவை காட்டுகிறது. மகோற்சவ காலங்களில் கொடிமரத்தையே சிவமாகக் கண்டு பகலும் இலவும் அதற்குச் செய்யும் ஸ்தம்ப பூசையைத் தரிசிப்பதால் சிறந்த தீட்சைப் பயனையடைந்து பெரும் புண்ணியம் அடைகிறோம். கொடியேற்றம் என்பது மற்றொரு கருத்தையும் உணர்த்துகிறது. 

இறைவனுக்குக் கொடியாக இருப்பது எருது. அதுதான் தரும தேவதை. நாட்டிலேயும் வீட்டிலேயும் தருமம் தழைக்கவும் அறம் ஓங்கவும் நிலைக்கவும் வேண்டும் என்பதற்காக அந்த அறக்கொடியையே மகோற்சவ காலங்களில் கொடக்கநாள் கொடியாக ஏற்றுவது வழக்கம். பலரும் அறிய உயர்த்திக் கட்டி அந்த நாட்களில் தேவர்கள் முனிவர்கள் கந்தருவர்கள் எல்லோரும் அந்த அறக்கொடியையே மகோற்சவ காலங்களில் தொடக்கநாள் கொடியாக ஏற்றுவது வழக்கம். பலரும் அறிய உயர்த்திக் கட்டி அந்த நாட்களில் தேவர்கள் முனிவர்கள் கந்தருவர்கள் எல்லோரும் அந்தச் சிவாலயத்துக்கு அணித்தாக வந்து உறைகிறார்கள் என்ற நம்பிக்கையோடு விழாக்கள் நடாத்தப்படுகிறது. .

பஞ்ச கிருத்தியமாகிய படைத்தல்இ காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் தொழில்களில் கொடியேற்றம் படைத்தலைக் குறிக்கும். இரண்டாந்திருவிழா காத்தலைக் குறிக்கும். அத்துடன் இருவகை யாக்கை நீக்கம். மூவகைக் கன்ம நீக்கம், நாண்கு தரண நீக்கம் ஐம்புல ஆசை நீக்கம், காமாதி ஆறு நீக்கிம், ஏழுவகை பிறப்பு நீக்கம் என்பவை ஏழு திருவிழாக்களும் காட்டுகிறது. இது மறைத்தலைக் காட்டுகிறது. எட்டாந் திருவிழா இறைவனின் எண் குணவிக்கத்தைக் காட்டுகிறது. ஒன்பதாம் திருவிழா ஒன்பது திருமேனியில் இறைவன் விளங்குகிறான் என்பதைக் காட்டுகிறது. தேர்த் திருவிழா என்பது அழித்தல் தொழிலைக் காட்டுகிறது. தீர்த்தத் திருவிழா அருளல் தொழிலைக் காட்டுகிறது. கொடியேற்றம் இன்னும் ஒரு உண்மையைக் காட்டுகிறது. அதாவது மனிதன் தனது ஆறு ஆதாரங்களையும் கடந்து எம்பெருமானை அடைகின்ற பெருவெளியில் சஞ்சரிக்கும் பெருநிலையை அடைவதே அவன் குறிக்கோளாகும். 

மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், ஆனாகதம், விசுர்தி ஆக்ஜை என்பன ஆறு ஆதாரம். இவ்வாறு கடந்து குண்டலினி சக்தி மேலெழும்புவதையேகொடிச் சீலை காட்டுகிறது. சுற்றிச் சுற்றி அது போய் முடிவான இன்பமாகும். கொடியேற்ற விழா இந்தத் தத்துவத்தையும் உணர்த்துவது. எனவே ஆலயத்தில் இருந்து நிறைந்த திருவருட் பயனை அடையவேண்டுமானால் அங்கு கொடிக் கம்பம் நாட்டி கொடியேற்றம் முதல் தீர்த்தம் வரை பகலும் இரவும் விழாக்கள் நடத்தி அந்த நாட்களில் சைவமக்கள் விரதமிருந்து வழிபாடு செய்து ஸ்தம்ப பூசையைத் தரிசித்து இஷ்டசித்திகளைப் பெற முயல வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சப்தகன்னியர்..!

ஆலய அமைப்பும் அறிவியலும்..!

யார் இந்த ஆதிசேஷன்?! அவர் விஷ்ணு பகவானை தாங்கும் பாக்கியம் பெற்றது எப்படி?