கொடியேற்ற மகத்துவம்

கொடியேற்ற தத்துவமும் வரலாறும் மனம், வாக்கு காயங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் உருவத் திருமேனி கொண்டு எழுந்தருளி இருக்கும் இடங்களே ஆலயங்களாகும். பாலிலே நெய் போல் வெளிப்படாது நிற்கின்ற இறைவன் ஆலயங்களிலே தயிரிலே நெய் போல விளங்கி நிற்கின்றான். மனித உடம்பு போல ஆலய அமைப்பும் விளங்குகிறது. தெய்வத்தின் சாந்நித்தியத்துக்கு உரிய புனித இடம் ஆலயத்தில் கொடிக் கம்பத்திலிருந்து கர்ப்பக் கிருகம் வரை வியாபித்திருக்கிறது. கொடி மரம் மூலாதாரமாகவும் பலிபீடம் சுவாதிட்டானமாகவும் பக்கத்திலே அமைந்துள்ள வாகனம் மணி பூரகமாகவும் அமைந்துள்ளது. இறைவனின் அருளை உயர்த்திக் காட்டிக்கொண்டிருப்பது போல் கொடிமரம் விளங்குகிறது. கொடி மரத்தை, துவஜஸ் தம்பம் என்று சொல்வர். இது கோவில் கோபுரத்தின் முக்காற் பங்கு உயரத்துக்கு அமைய வேண்டும் நிலத்துக்குள் ஐந்தில் ஒரு பாகம் ஸ்தாபனம் செய்யப் படவேண்டும். அடிப்பாகம் சதுரமாக அமைய வேண்டும். இது ஸ்தம்ப பீடம் என்று சொல்லப்படும். மனித உடலுக்கு முதுகெலும்பைப் போலக் கொடிமரத்துக்கு அதன் தண்டுப் பகுதி இன்றியமையாதது. உடலில் சுழு முனை நாடி செல்லும் வழியாகிய வீணைத் தண்டை கொடிமரம் குறிக்கிறது....